top of page

இந்த உலகில் தக்கன பிழைப்பதற்கென‌ சில பிரத்தியேக வழிகள் தேவைப்படுகின்றன. - முகுந்தன் -மெய்வெளி நாடகப் பயிலக April மாதத்திற்கான

மாதாந்த அவைக்காற்றுகை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட IBC தமிழின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் திரு.முகுந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும் என்றது அன்றைய காலம். ஆனால் இயந்திரமயமாக்கப்பட்ட இன்றைய நவீன உலகில் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வளர்வதற்கு இவ்விரண்டையும் தாண்டி இன்னுமொன்றும் தேவைப்படுகின்றது. சுய விருத்தி என்பதே அது. . பாடசாலைக் கல்வி, அது முடிந்ததும் பிரத்தியேகக் கல்வி என்று கல்வியைத் தேடித் தேடி ஓடிக்கொண்டிருப்பதால் மட்டும் நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் அறிவு கிட்டி விடாது. அதனையும் தாண்டி உலக அறிவு என்று ஒன்றும் தேவைப்படுகின்றது. சரி , இந்த உலக அறிவை எந்தப் புத்தகத்தில் படிக்கலாம் ? இந்தக் கேள்விக்கு பதில் இல்லை என்பதே பல தேடல்களின் முடிவு. புத்தகக் கல்வி மட்டும் ஒரு மனிதனை மனிதனாக்கி விடாது. அதையும் தாண்டி சுய ஆளுமை விருத்தி, சுய சிந்தனை விருத்தி, கற்பனை விருத்தி ,குழுவாக செயற்படும் திறன், தலைமைத்துவ பண்பு, உடல் வாகு மொழி என்று , மனிதர்கள் கூட்டாக வாழும் இந்த உலகில் தக்கன பிழைப்பதற்கென‌ சில பிரத்தியேக வழிகள் தேவைப்படுகின்றன.எந்தப் புத்தமும் கொடுத்துவிட முடியாத இந்த சிறப்பியல்புகளை பெறுவதற்கான களங்களின் ஒன்று இந்த மெய்வெளி நாடகம் பயிலகம். நேரடியாக இங்கு பயிலும் மாணவர்களின் செய்ற்பாடுகளை அவர்களின் அரங்க ஆற்றுகைகளை பார்த்தவன் என்ற வகையில் ,மெய்வெளி என்பது எமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்லவேண்டும். முறையாக‌ எங்கள் நாடக படிமங்களை சிறு வயது முதல் கொண்டு பயின்று இன்று அதை அடுத்த சந்ததிக்கு கடத்த எத்தனித்திருக்கும் திரு சாம் பிரதீபன் மற்றும் ரஜிதா சாம் அவர்களின் சிந்தனைக்கும் முயற்சிக்கும் என் முதற்கண் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்துகொள்கின்றேன்.எங்கள் தனித்துவமான அடையாளங்களுடன் , எங்களுக்கே உரிய விழுமியங்களுடன் கூடிய இந்த நாடக கலையை வாடகை மொழிகளோடு வாழ்ந்து வரும் நாடுகளில் தமிழர்கள் மத்தியில் விதைத்து புத்துயிர் கொள்ளச்செய்யும் இந்த முயற்சி நிச்சயம் காலத்தால் வரவேற்க வேண்டிய விடயம்.இவை வெறுமனே ஒரு கலையை பயிற்றுவிக்கும் பயிலகமாக மட்டும் இல்லாமல் அதனையும் தாண்டி இன்னும் பல ஆரோக்கியமான விடயங்களை எங்கள் எதிர்கால சந்ததியினர் மத்தியில் கொண்டு சேர்கின்றது.எந்த ஒரு திணிப்பும் இல்லாமல், புத்தகம் பேனாக்கள் இல்லாமல்,மாதம் தோறும் பயமுறுத்தும் பரீட்சைகள் இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாகவே இயல்பாக இயங்கவிட்டு தங்களைத் தாங்களாவே உணர்ந்து சிந்துக்கும் வண்ணம் ,செயற்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது இந்த மெய்வெளி கற்கை நெறி. உள ஆற்றுகைக்கான ஒரு களமாக , ஆளுமை விருத்திக்கான ஒரு களமாக ,தலைமைத்துவ பண்புகளை தாங்களே தங்களுக்குள் வளர்த்துகொள்ளும் வண்ணம் , இலகுவான முறையில் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான முற்றிலும் அனுபவ ரீதியான ஒரு கல்வியை நாடகக் கற்கை நெறி கடந்து இங்கு பெறலாம் என்பது எனது திண்ணம்.அதிக வேலைப்பளு காரணமாக பெற்றோர் நேரம் செலவழிக்க முடியாத நிலை கொண்ட சிறுவர்களுக்கும் இந்த வாராந்த சில மணி நேர கற்கை என்பது , மனதளவில் ஒரு பெரும் ஆரோக்கியமான மாற்றத்தை எற்படுத்தக் கூடிய ஒரு கருவியாக செயற்படுகின்றது என்றால் அது மிகையாகாது.ஒத்த வயதுடைய பிள்ளைகள் மழலை மாறாது மனம் திறந்து தாய்த்தமிழ் மொழியுடன் இந்த கற்கைசெயற்பாடுளில் ஈடுபடுவதினால், நீண்ட கால கேள்விக் குறியாக இருந்த எங்கள் மொழியின் இருப்பும் எதிர் கால சந்ததியினரிடம் விருப்புடன் வேரூன்றும் என்பதில் ஐயமில்லை. ஆக, இன்றைய சூழ்னிலையில் புலம்பெயர் நாடொன்றில் மெய்வெளியின் இத்தகைய செயற்பாடு என்பதும் அதன் தேவை என்பதும் இன்றியமையாததாகின்றது.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க , இந்த மெய்வெளி என்ற ஒரு பெரும் களத்தை எம் அடுத்த சந்ததி மட்டுமில்லை இன்றைய சந்ததி கூட முறையாக முழுமையாக‌ பயன்படுத்தி உடல் ரீதியாக மட்டுமின்றி உள ரீதியாகவும் முழுமையான பயன்பெற வேண்டும்.
109 views0 comments

Comments


bottom of page