நாடகத்துக்கான மாபெரும் புரட்சியை லண்டன் தமிழர்களை நோக்கி சீண்டிவிட்டிருக்கிறது “நடிகரதம் 2019”

Updated: Oct 1, 2019


மெய்வெளி நாடகப் பயிலகம் நடத்திய ”நடிகரதம்” என்னும் பிரித்தானியா தழுவிய ஓராள் நடிபாகப் போட்டிக்கு பிரதான நடுவராக சுவிற்சலாந்து மண்ணில் இருந்து வருகை தந்திருந்த

கலைவளரி அமைப்பைச் சேர்ந்த திரு.ச.க.இரமணன் (சுவிஸ்) அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லண்டன் மெய் வெளி அரங்காற்றுகை செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் கடந்த 21.09.2019 அன்று பிரித்தானிய நாடு தழுவிய ரீதியாக நடைபெற்ற ஓர் ஆள் வகிபாக நாடகப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக பங்கு கொண்டு அங்கு அரங்கேறிய நாடகங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை பெற்றேன்.

போட்டிகள் முறையே பத்து வயதிற்கு உட்ட சின்னஞ்சிறுவர்கள், பதினெட்டு வயதிற்கு உட்பட்ட பதின்ம வயதினர் மற்றும் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட வயதெல்லையற்றவர்கள் என மூன்று வகையாக தரம்பிரித்து நடாத்தியிருந்தனர். இதில் 35 நாடகங்கள் போட்டியிட்டன. பத்து வயதிற்கு உட்பட்டவர்களின் எட்டு நாடகங்கள் அரங்கேறின. நான்கு வயது முதற்கொண்டு பத்து வயதுவரையான சின்னஞ்சிறு மழலைகளின் அரங்காற்றுகை எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் போட்டியில் பிரதானமாக கவனிக்கபட்ட கதைக்கரு, உடல் மொழி, முக பாவனை, குரல் பிரயோகம், உணர்ச்சி வெளிப்பாடு, பாத்திர வார்ப்பு, வேட உடை, இசைப்பிரயோகம், அரங்க அமைப்பு, கையில் பயன்படுத்தும் பொருட்கள் என பத்து விடயங்களை நன்றாக கவனித்து சிறப்பாக அரங்காற்றினர்.

அதில் “வட்டுவாகல்”எனும் நாடகத்தில் நடித்த சிறுமி அனனியா பாத்திரத்தோடு ஒன்றித்து நடித்ததோடு மேடையை, மேடை பொருட்களை சரியாக பயன்படுத்தி அப்பொருட்களை பல குறியீடுகளாயும் பாவித்து தனது நடிப்புக்கு மேலும் மெருகூட்டினாள்.

“குழந்தையும் தேசமும்” எனும் நாடகத்தில் நடித்த சிறுமி அதீரா கதையின் தலைப்புக்கு ஏற்ற வகையில் குழந்தைகளுக்கே ஏற்ற இயல்பாக நடித்ததோடு மேடை முழுவதையும் தனது நடிப்பிற்காய் பயன்படுத்தியதும், ஊமம் (“மைமிங்”) நடிப்பு முறையை மிகத்திறம்பட நடித்து எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்டாள்.

“தமிழரும் இளம் சமுதாயமும்” எனும் நாடகத்தில் நடித்த சிறுவன் தான் ஏற்றுக்கொண்ட இரு பாத்திரங்களில் மாறி மாறி நடித்ததோடு பாத்திரத்துக்கு ஏற்ப தனது குரலிலும் மாற்றத்தை காட்டி கதைக்கருவை சரியாக புரிந்து கொண்டு நடித்தது சபையோரை ஆச்சரியப்பட வைத்து. ஏனைய சிறுவர் சிறுமியரின் நடிப்புகளும் அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக இருந்தது.

பதினெட்டு வயதிற்கு கீழ்ப்பட்ட பதின்மவயதினரின் பதினொரு நாடகங்கள் அரங்கேறின. இதில் தாய்மை, ஈழத்து அம்மாக்கள், நான், நான் கண்ணம்மா, தொல்லையாய் போன தொலைபேசி போன்ற நாடகங்கள் மிகவும் கவனத்தைப் ஈர்த்தன.

“தாய்மை” எனும் நாடகத்தை செல்வி பூர்வயா முற்று முழுதாக ஊமம் (“மைமிங்”) நடிப்பு முறையில் மேடையை நன்றாக பயன்படுத்தி நடித்து பார்வையாளரை கண்கலங்க வைத்தார். அவரது ஊமம் நடிப்பில் நாட்டிய அபிநயங்கள் இருந்தபோதும் அவரது நடிப்பின் வெளிப்பாடு சிறப்பாக இருந்தது.

“ஈழத்து அம்மாக்கள்” எனும் நாடகத்தில் நடித்த செல்வி நிவேதா ஓராள் வகிபாக நடிப்பிற்கு ஏற்ற வகையில் தனது நடிப்பில் உடல் மொழி, முக பாவனை, குரல் பிரயோகம், உணர்ச்சி வெளிப்பாடு, பாத்திர வார்ப்பு போன்ற அனைத்தையும் சரியாக உள்வாங்கி நடித்தது அபாரமானதாக இருந்தது.

“நான்” எனும் நாடகத்தில் நடித்த செல்வன் கலாஷ் இருதலைக்கொள்ளி எறும்புபோல் அல்லாடும் மாணவனாக நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையிலும் உறவுகளின் அழுத்தங்களை சகித்துக் கொண்டும் திண்டாடிக்கொண்டும் நடித்தமை சபையோர் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு தான் ஏற்றுக்கொண்ட பத்திரத்தை இயல்போடு நடித்தார்.

“நான் கண்ணம்மா” எனும் நாடகத்தில் நடித்த செல்வி ஜெரால்டினி மனதில் தோன்றும் இரண்டு விடயத்துக்கு தீர்வுகண்டு ஒன்றை தெரிவுசெய்ய கைப்பொம்மைகளை பயன்படுத்தி தன் நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமை ஒரு வித்தியாசமான படைப்பாக வெளிப்பட்டது.

“தொல்லையாக போன தொலைபேசி” எனும் நாடகத்தில் நடித்த செல்வி அபீனயா ஊடகங்களினதும் தொழில்நுட்பங்களினதும் தொல்லையை இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பில் வெளிப்படுத்தினார்.


பதினெட்டு வயதிற்கு மேல் வயதெல்லையற்றவர்களில் பதினாறு நாடகங்கள் மேடையேறின. முகாரி மீட்டும் குரிசில், புதையுண்ட மானிடம், கானல், இன்னொரு மனிதன், பெத்தமனம், சிந்தனை செய் மக்காள், போரின் சாட்சியம் போன்ற நாடகங்கள் பார்வையாரின் சிந்தைக்கு விருந்தானது.


ஆழமான கதைக்கருவுடனும் அழகிய சொல்லாடலுடனும் மிடுக்கான பாத்திரவார்ப்புடனும் துடுக்கான உச்சரிப்போடும் நுணுக்கமான கதைப்பின்னலோடு மின்னலென தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் “முகாரி மீட்டும் குரிசில்” நாடக நடிகர் ஜெபநாதன். இவரின் நடிப்பில் இந்த நாடகத்திற்காக நீண்டகால பயிற்சி பெற்றிருக்கிறர் என்பது தெரிந்தது.

போரின் வடுக்களினால் மகளையிழந்த தந்தையின் அடிவயிற்ல் எழுகின்ற உழைச்சலை தகுந்த உடல் மொழியால் அரங்க அளிக்கையிலே பல மனங்களில் புதையுண்டு கிடக்கும் ஏக்கங்களை வெளிப்படுத்தி இதயங்களை கனக்கவைத்த “புதையுண்ட மானிடம்” எனும் நாடகத்தினூடாக வரகுணன் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

மேற்படி நாடகத்தில் கதை வசனங்களிலும் சொல் வெளிப்பட்டிலும் உரையாடலிலும் சிறு குறைகள் இருந்தபோதும் அளிக்கை சிறப்பாக இருந்தது.

நாம் உயிர் பிழக்காவிட்டாலும் தன்னுயிர் தமிழும் பரம்பரையும் தமிழோடு தப்பவேண்டும் என்று ஒரு சாதாரண தந்தையின் ஏக்கம் எப்படிக் கானலாய் போனது எனும் கதைக்கருவோடு மேடையில் தோன்றிய ஈஸ்வரன் தனது அபாரமான நடிப்பை இரு பாத்திரமேற்று நடித்தமையும் அதற்கேற்ப குரல் மாற்ற ஏற்ற இறக்கங்களோடு பேசி நடித்தமை அவர் ஒரு கைதேர்ந்த நடிகர் என்பதனை காட்டிச் சென்றது.

புரையோடிப்போன எமது சமூகத்தில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வு தொட்டு வாழும் வாழ்கைவரை அக்கு வேறு ஆணி பேறாக பிய்த்துப்போட்டது சாம்சனின் “இன்னுமொரு மனிதன்” எனும் நாடகம். நவீன உத்திகளை பயன்படுத்தி சிறந்த உடல் மொழியோடும் தரமான கதைப்பின்லோடும் வேட உடையோடும் முகமிழந்த மனிதனாக உலகப்பந்தில் அலையும் இரண்டும் கெட்டான் வாழ்வை அளிக்கை செய்தார். இம்மேடையில் நடைபெற்ற நாடகங்களிலே இந்த நாடகமே ஒரு நவீன நாடகமாக கருதமுடியும். மேற்படி நாடகத்தில் நடுவர்களால் கவனிக்கப்பட்ட பத்து விடையங்களில் சில முழுமை பெறாததால் சிறந்த நாடகமாக இருந்தபோதும் முதல் மூன்று இடத்திற்குள் வரமுடியாமல் போனது வருத்தமே.


பெற்றவருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் புரிந்துணர்வின்மை, முரண்பாடுகள், எடுக்கும் முடிவுகள் போன்றவற்றை “பெத்தமனம்“ எனும் நாடகம் காட்டி நின்றது. இந்த நாடகத்தில் நடித்த சாய் ரட்ணா தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் உணர்வுபூர்வமாக நடித்து பார்ப்பவர் மனங்களில் ஏக்கத்தை ஏற்படுத்தினார். ஒரு இயல்பான தாயினுடைய உள்ளத்து ஆதங்கத்தை சொல்லி இளையோரை இளக வைத்தார். இந்த நாடகமும் நடிக்க வாய்ப்பிருந்தும் அதிக அழுகையால் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தது துயரமே.

“சிந்தனை செய் மக்காள்” பாரதியாக வந்த நடிகர் பிரபாகரன் பாரதி தமிழ் மீதும் தமிழர் நாடு மீதும் கொண்டிருந்த பற்றையும் தொலைநோக்குப் பார்வையையும் தமிழர் காப்பாற்றாது செல்லும் அசமந்தப் போக்கை விமர்சிக்கும் பாத்திரம் ஏற்று நடித்தார். நல்ல கதைக்கருவாய் இருந்தபோதும் நடிப்பில் பாரதிக்கான அக்கினிபிரவாகம் பொங்காது போனது ஏமாற்றமே!

“போரின் சாட்சியம்” எனும் நாடகம் ஒரு நவீன நாடகமுறைமையை தொட்டு வருவதாய் நாடக ஆரம்பத்தில் ஒரு தோற்றத்தை பாரப்போர் மனதில் ஏற்படுத்திய போதும் தொடர்ச்சியான நடிப்பில் அது எந்தவொரு மோதுகையும் அற்ற வகையில் நாம் நம்பிய நம்மவர்கள் சிலர் நம்மை நம்பவைத்து தாம் பிழைப்பை தேடிக்கொண்ட விமர்சன முறைமையில் தொடர்ந்ததும் அதற்கான வலுவான செய்தியை பகிராமல் போனது ஏக்கமே!

ஆக மொத்தத்தில் குறிப்பிடத்தக்க ஒருசில நாடகங்களை தவிர ஏனைய நாடகங்கள் நாடக பிரதி இன்றியும் கணப்பிரசன்னமாகவும் இருந்தது என்பதையும் சொல்லியேயாக வேண்டும் என்பதை நிராகரிப்பதற்கில்லை.