top of page

நாடகத் துறையை சரியான நேரத்தில் கையில் எடுத்து சரியான இடத்தில் காத்திரப்படுத்தியிருக்கிறது “மெய்வெளி”


கண் பொய்த்துப் போய்விட்டதோ?

இல்லை இல்லை காண்பதும் உண்மை

கருதுவதும் உண்மை - கண் எதிரே

நடப்பதும் உண்மை


கருத்தூறும் காட்சியும் கலை அரங்கில் 

தமிழ் எழுச்சியும் நாடக மறுமலர்ச்சியும்


21.09.2019 சனிக்கிழமை மாலைப்பொழுது அழகுறும் போது இருக்கைகள் யாவும் நிரம்பிப்போக நின்றுகொண்டே ரசித்தனர். தொய்வின்றி, வீண் விவாதமின்றி, வேண்டிப் பெய்த மழை போன்ற தொடக்கம் திரு.சாம் பிரதீபன் அவர்களின் மெளன அஞ்சலியோடு அழகாக ஆரம்பித்து  இளையோர் தொகுத்து வழங்க நேரம் கடந்ததே தெரியவில்லை.

நிறைவில் சான்றோர்கள் கூடி மகிழ்ந்து புகழ்ந்து இன்முகத்தோடு பரிசில்கள் வழங்க அழகாக நிறைவு கண்டது.

மாபெரும் தமிழ் நாடகப் புரட்சியை,  புலம்பெயர் தேசத்தில் பெரும் மறுமலர்ச்சியை, ஆற்றல் மிக்க நடுவர்கள் மத்தியில் திரு.சாம் பிரதீபன் திருமதி றஜித்தா இருவரும் பெருந்தன்மையோடும் பெருமிதத்தோடும் நிகழ்த்தியிருந்தார்கள்.

பல இடங்களில் நாடகப் பட்டறையை நிகழ்த்தி, அதன் சிறப்புப் பெறுபேறாக இறுதியில் பெரும் நாடக மறுமலர்ச்சியை தமிழ் சமுகத்தில் ஏற்படுத்தியதோடு நின்றுவிடாமல், இளைய தலைமுறையினருக்கு அழகாய் பாய்ச்சி,விதைத்து, மூன்று தலைமுறையினரை உள்வாங்கச் செய்து அதிலே போட்டியும் வைத்து, எந்த தழும்பலும் இல்லாமல் மூன்று பிரிவிலும் மும்மூன்று பேரை தெரிவு செய்து, ஒன்பது பேருக்கு சிறப்பான பணப் பரிசில்கள் வழங்கி தமிழுக்கு அளப்பரிய பணியாற்றியதை நான் நேரடியாகக் கண்ணுற்றேன்.

அதன் அடிப்படையில் இந்த நாடக மறுமலர்ச்சியை நான் என்னுடைய எழுத்தாளன் என்ற பார்வையில் பார்க்க விரும்புகிறேன்.


“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”

எனக்குப் பிடித்த குறள்.


ஊடகத் துறையிலும் நாடகத் துறையிலும் நடிப்புத் துறையிலும் ஆற்றலும் அறிவும் பட்டறிவும் கொண்டவர்கள் திரு.சாம் பிரதீபன் அவர்களும் திருமதி றஜித்தா சாம் அவர்களும் ஆவர். இவர்கள் பல எதிர்வினைகளைத் தாண்டி தமிழுக்கு மிகச் சிறந்த அங்கமான நாடகத் தமிழைக் கையில் எடுத்துப் போற்றி, இன்றைய இளம் தலைமுறையினரை உள்வாங்கி, அவர்களை மதித்து, அவர்கள் கையிலே முத்தமிழில் ஒன்றான மூத்தகுடித் தமிழைக் கொடுத்து, நெஞ்சிலே ஆழமாக ஊன்றச் செய்த பெருமை இவர்களையே சாரும். 

அத்தோடு இவர்களுக்கு மூத்தவர்களான ஐயன் பாலேந்திரா, அம்மை ஆனந்தராணி பாலேந்திரா இருவரையும் நான் மறந்துவிட்டோ கடந்தோ சென்றிவிட முடியாது. அவர்கள் அவ்வளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அதே போன்று திரு.திருமதி சாம் பிரதீபன் அவர்களும், இன்னுமோர் நாடகப் பள்ளியை நடத்தும் மூத்த ஆற்றலும் அனுபவமும் கொண்ட திரு.திருமதி பாலேந்திரா இருவரையும் அழைத்து கெளரவித்து காத்திரப்படுத்திய பெருந்தன்மையை கண்ணுற்று வியந்தேன். இதுவே தமிழ்ச் சபையின் பெருமை. இதுவே சங்கம் வைத்த தமிழின் உடமை.

அந்த உள்ளார்ந்தமான உடமை பேணப்பட்டதை, கற்றறிந்த தமிழ்ச் சபை மூத்தவர்களான மூத்த கலைஞர்களை கெளரவப்படுத்தியதை நான் கண்ணுற்று மகிழ்ந்தேன். இதுவே “தமிழ்ச் சபை” என்று வியந்தேன்.

அப்பால் பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் எழுத்துத் துறையில் நீண்ட ஆற்றலும் அனுபவமும் கொண்டவர். அவர் எழுத்துக்களை நான் சிறு வயது முதல் பார்த்திருக்கிறேன். அவர் பார்வை பட்டது மெய்வெளிக்கு சிறப்பே. அத்தோடு முன்னாள் நகரபிதா தனது துணைவியாரோடு வந்து கலந்திருந்ததும் ஒரு சிறப்பே. 

மேலும் மழையை வரவழைக்க தமிழன் கண்டுபிடித்த பயிர் நெல். நீரிலே கிடந்து, நீரிலே வளர்ந்து, வரம்பிலே சாய்ந்து வாழவைக்கும் பயிர் நெல். வரப்பு கட்டி வளர்த்த பயிர் நெல். வரம்பும் வயலும், நெல்லும் நீரும் அழிந்தால் உலகம் அழியும். அதேபோல் தமிழை வாழ வைக்கும் முத்தமிழில் ஒன்றான நாடகத்தமிழ் அழிந்தால் தமிழ் மெல்ல மெல்ல அழியும். இது திண்ணம். அது பொய்த்துப் போக மீண்டும் உயிர் கொடுத்தது “மெய்வெளி நாடகப் பயிலகம்”

அதன் அடிப்படையில் உள்ளத்துணர்வுகளை தெள்ளத் தெளிந்த தமிழில் தெளிந்துரைத்து, 

மூன்று தலைமுறையினருக்கு ஒரு சிறப்பான தளம் அமைத்துக் கொடுத்து, முத்தமிழில் ஒன்றான நாடகத் துறையை சரியான நேரத்தில் கையில் எடுத்து காத்திரப்படுத்தியது வியப்பே. சரியான நேரத்தில் சரியான இடத்தில் விதைத்ததும் விதைப்பே. எல்லோரும் ஒன்று கூடிக் கழித்து எல்லாம் நிறைவு பெற, ஐயையோ முடிந்துவிட்டதே! இனி எப்போது கூடுவோம். இப்படி ஒன்றை எப்போது கண்டு கழிப்போம் என்ற எண்ணத்தோடு சிறப்புற விடுபட்டோம். 

அவ்வாறு நிகழ்த்தப்படும் நிகழ்வே சிறந்த நிகழ்வாகும். அதை வள்ளுவன் இப்படிக் கூறுகிறான்.

“உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்”


புலம்பெயர் தேசத்தில் கல்விக்கூடங்கள் வியாபாரக் கூடங்களாக இருக்கும் நிலையில், தமிழ் கற்கை நெறியை தவறான முறையில் பயன்படுத்த எம் தமிழ் சமுகம் திணறும் தளத்தில், புதிய திருப்புமுனையாக மறுமலர்ச்சியாக மெய்வெளி நாடகப் பள்ளியும் அதன் அரங்கும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருப்பது பெரும் பேறே. பெற்றவர்கள்  கற்றவர்கள் கலைஞர்கள் இதை நன்கு அறிந்து ஆராய்ந்து மெய்வெளியை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்றும், இது எதிர்காலத்தில் கலைத்துறைப் பல்கலைக்கழகமாக நிமிர நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும், பெரும் பார்வையை செலுத்துகிறேன். அதன் மூலம் தமிழை, முத்தமிழான இயல் இசை நாடகத்தை வரம்பு கட்டி விளைவித்து வாய்க்கால் வழி ஓடி புல்லுக்குமாங்கே புசியை விட முடியும்.

பாரினில் எனக்கு பசிதீர்க்கும்

பெருவிருந்தே தமிழ்

பூர்வீகம் முழுக்க பிணிதீர்க்கும்

அரு மருந்தே தமிழ்

பன்மொழி அடுக்கத்து பேசிடும்

தாய் மொழியே தமிழ்

என் மொழியொன்றே வன்மொழி அகற்றும்

தன்னிகரில்லாத் தமிழ்

என்று நிறைவு செய்கிறேன்.


த.ரஜீந்திர குமார்






56 views0 comments

Kommentare


bottom of page