நாடகத்துறையில் மெய்வெளி நாடகப் பயிலகத்தினர் ஆபத்பாந்தவர்களாகத் திகழ்கின்றனர். - தேவராசா காண்டீபன் -
மெய்வெளி தந்த ‘நடிக ரதம் 2019’ பற்றி எனது எண்ணக்கருவை இதுகாறும் கூறி விடவில்லை என்று எனது மனம் எனைப் பார்த்து எள்ளி நகைத்துக் கொண்டிருக்கின்றது. எனது எண்ணக் கருவை இங்கு வெளிப்படுத்தும் தகுதி எனக்கு இருக்கின்றதோ என்பது எனக்கு இன்னும் விளங்காத ஒரு பதிலாக இருக்கின்ற பொழுதினுலும் என் மனக்கிடக்கையைக் கொட்டி விட வேண்டும் என்பதே எனது திண்ணம்.
ஆம், புரட்டாசி மாதம் 21ம் நாள் இலண்டன் மாநகரில் ஒரு நாடகத் திருவிழா நிகழ்ந்தேறியது. அந்த ஒரு நாளில் நிகழ்ந்தேறிய ஓராள் நடிபாகப் போட்டியில் நிகழ்ந்தவை பற்றிக் குறிப்பிட முன்னர் ஒரு தடவை ‘நாம் யார்? எமது கலைகள் எவை? எமது விழுமியங்கள் எவை ?’ என்பது பற்றிச் சற்று ஆராய்வது சிறந்தது என நினைக்கின்றேன்.
இயற் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்பவை முத்தமிழ் என்பர். நாடத்தமிழ் கேட்போரையும், பார்ப்போரையும் மகிழ்வித்து வருவது தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது. அறநானூறு, புறநானூறு போன்ற நூல்களிலும் சரி; சங்க காலத்திலும் சரி; சங்கமருவிய காலத்திலும் சரி; ஆங்கிலேயர் ஆதிக்கத்திலும் சரி தமிழ் வளர்த்தவர்கள் விரும்பிய ஒரு கலை ‘நாடகம்’. கற்காலம் முதல் தற்காலம் வரை இலங்கையில் கூட நாடகம் என்பது மிகவும் உன்னதமான ஒரு கலையாகவே பார்க்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் சரி; வன்னியிலும் சரி; கிழக்கு மாகாணத்திலும் சரி; மலையகத்திலும் சரி; இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சரி சில வேறு பட்ட வடிவங்களிலும் வித்தியாசமான மரபுகளுக்கு அமைவாகவும் ‘நாடகம்’ அன்று தொட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது. தாயகத்தில் இருந்து தமிழர்களின் இடப்பெயர்வும், புலம்பெயர்வும் இலங்கைத் தமிழர்கள் தமது விழுமியங்களில் இருந்து சற்றே பின்னகர்ந்து திரைப்பட மாயைக்குள் விழுந்து விட வைத்து விட்டது. புலம் பெயர் தேசங்களில் தமிழையும், எமது கலைகளையும், விழுமியங்களையும் காக்க என்று பலர் தோன்றி வெற்றி பெற்றாலும், நாடகம் என்ற கலை மீதான பார்வை குறைவாகவே இருக்கின்றது. பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் மற்றும் திரு.திருமதி பாலேந்திரா போன்ற கலை வல்லுனர்களுக்குப் பின்னர், பிரித்தானிய மண்ணில் நாடகத்துறை திரைப்படத்துறையின் மாயைக்குள் மீண்டும் வீழ்ந்து விடாமல் அத்துறையக் காக்க வந்த ஆபத்பாந்தவர்களாக நான் கருதுவது ‘மெய்வெளி’ என்ற நாடகப் பட்டறையை எமக்குக் காட்டிய திரு.சாம் பிரதீபன் மற்றும் திருமதி.பிரேமலதா (றஜித்தா) பிரதீபன் என்றால் மிகையாகாது.
இலண்டனில் சில காலம் முன்னரே உருவாக்கப்பட்ட ‘மெய்வெளி’ என்ற நாடகப் பட்டறையின் தமிழ் ஓங்கும் சத்தம், இன்று இங்கிலாந்தின் நடுப்பகுதி வரை கேட்கின்றது. இந்தக் கலைத் தம்பதிகள் மெய்வெளி ஆற்றுகைக் குழுவினருடன் சேர்ந்து ‘’அரங்கினூடு மொழி கற்றல். அரங்கினூடு களி கொள்ளல். அரங்கினூடு வளம் காணல்’ என்று கூறித் தமிழையும், கூர்ந்திறனையைம் வளர்க்கத் தலைபட்ட விடயம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விடயம். நானும் எனது ஆறு வயது மகனை மெய்வெளியின் அரங்கத்தில் கடந்த உயிர்ப்புப் பெருவிழாவை அண்மித்த பாடசாலை விடுமுறையில் ஒருநாள் பட்டறைக்குக் கூட்டிச் சென்று ‘பட்டை’ தீட்டிக் கொண்டு வந்தேன். உண்மையாகவே, இக்கலைத் தம்பதிகளின் கற்பித்தல் முறைமை வித்தியாசமானதாகவம், ஆச்சரியமானதாகவும் இருந்தது. குழந்தைகள் நடிபாகத்தை மட்டும் அங்கு கற்கவில்லை. குழந்தைகள் தமக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வெட்கம், ஆளுமைக் குறைபாடுகள், மற்றோருடன் உரையாடுவதில் உள்ள பிரச்சினைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்வதை அன்று ஒருநாள் பூராக ஒரு பார்வையாளனாக இருந்து கண்டு கொண்டேன்.
சரி இனி அரங்கத்துக்குள் செல்வோம். 21/09/19 அன்று பிற்பகல் அரங்கத்தினுள் நுழைந்தது முதல் ‘இன்றைய நாள் எப்படிக் களிப்பாகக் கழிய இருக்கின்றது’ என்ற ஒருவித அவாவுடன் இருந்தேன்.
வயதெல்லைக்கேற்றபடி மூன்று பிரிவுகளாக: பத்து வயதுக்குக் கீழ்ப்பட்டோரில் எண்வரும்; பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டோரில் பதினொருவரும்; பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோரில் பதினாறு பேருமாக மொத்தம் முப்பத்தைந்து நாடக நடிகர்கள் ஓராள் நடிபாகத் திருவிழாவில் ரதம் ஏறினர்! எனது ஆறு வயது மகனும் அங்கு அரங்கேறியமையால் என் விழி கொண்டு ஒரு சிலரின் நாடகத்தையும், திறனையும் கண்டு களிக்க முடியவில்லை. ஆயினும் பார்த்த நாடகங்களில் பலவற்றின் கதைக்களங்களையும், அவற்றின் கதாபாத்திரதாரிகளின் திறமை கண்டும் மெய்சிலிர்த்தேன். கலை நயம் தரும் கலைஞர்கள் எமக்குள் இலைமறை காயாக இருக்கின்றார்கள் என்று உரக்கக் கூவ வேண்டும் போலப் பல தடவை எனது நா துடித்தது.
மேலும், ‘நடிகரதம்’ என்ற ஒரு திருவிழாவை ஒழுங்கமைத்து பலருக்கு வழி காட்டி இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். ஒரு மிகப் பெருமளவான எதிர்பார்ப்புகளுடன் நிகழும் எந்த ஒரு விழாவிலும் மிகவும் அனுபவம் மிக்க அறிவிப்பாளர்களே அரங்கத்தை அலங்கரிப்புச் செய்வது வழக்கம். ஆனால், இளஞ் சிறார்களையும், இளைய தலைமுறையினரையும் முன்னிறுத்தி, அவர்களைக் கொண்டு கொஞ்சு தமிழில் மேடையை அலங்கரிக்கத் துணிந்த திரு.திருமதி பிரதீபனின் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அகவணக்கத்துடனும், அறிவித்தல் சிலவற்றுடனும் அரங்கை விட்டகன்ற இந்தத் தம்பதிகள் இளையோர்களிடம் அரங்கப் பராமரிப்பினை ஒப்படைத்து விட்டு அவர்களுக்கு வழிகாட்டி அமர்ந்தமை மிகவும் வரவேற்கத் தக்க விடயம். அதேவேளை மூத்த பல கலைஞர்களை மேடைக்கு அழைத்து அவர்களைப் பெருமைப் படுத்தியதன் மூலம் அந்த மேடை கூடப் பெருமைப்பட்டுக் கொண்டது.
அதேவேளையில், மெய்வெளியின் பின்னால் தமிழ் காக்கத் திடசங்கற்பம் பூண்டு நிற்கும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ் என்ற ஊடகத்துறையினரையும் மறந்து விடலாகாது. மேலும் ஒத்தாசை வழங்கிய பல நிறுவனங்களையும், கல்விமான்களையும் நன்றி பாராட்டாமல் விடலாகாது.
மேலும் நடுவர்களும் திறம்பட பத்து வகையான புள்ளித்திட்டங்களுடன் சிறப்புறத் திறமையாளர்களைத் தெரிவு செய்தனர்.
ஈற்றில், மூன்று பிரிவுகளிலும் நடிகரதமாக ஒவ்வொருவரும் மற்றும் இரண்டு வெற்றியாளர்களுமாக மொத்தம் ஒன்பது பேர் வாகை சூடிக் கொண்டனர். மேலும் அங்கு திறன் காட்டியவர்களுக்கான பரிசளிப்புகளுடன் விழா இனிதே நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.
’யான் பெற்ற இன்பம் பெறுக வையகம்’ என்று திருமந்திரம் தந்த திருமூலரின் கூற்றுக்கு அமைவாக, இந்த மெய்வெளிப் பயிலகம் தந்த திருவிழா வருடந்தோறும் வெகு சிறப்பாக நிகழ்வதன் மூலம் தமிழர் பலர் பயன் பெற வேண்டும் என்பதே எனது அவா, ஆவல் என்று கூறி ‘நடிகரதம் 2020’ வரும் வரை வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டு இருக்கின்றேன்.
Comments