top of page

வலிகளை சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை என நிரூபித்தது “தோன்றாச் சுவர்”

Updated: Nov 5, 2020

வலிகளை சொல்வதற்கு வார்த்தைகள் தேவையில்லை என நிரூபித்தது ”தோன்றாச் சுவர்”

- மகேன் பஞ்சலிங்கம் -



மேடையில் ‘யுத்தம்’ என எழுதபட்ட ஒரு ஆழ் கிணறு ஒன்றின் காட்சிப்படுத்தலுடன் ஆரம்பமானது “தோன்றாச் சுவர்” என்ற அந்த மொழி பேசப்படாத நாடகம். 

கடந்துபோன சனிக்கிழமை(14.12.2019) ஈஸ்ற்காமில் உள்ள றினிற்றி மண்டபத்தில்  தமிழர் தகவல் நடுவத்தினரால் நடத்தப்பட்ட உலக மனித உரிமைகள் தின சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக மெய்வெளியினரின் இந்த நாடகத்தைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அன்று வரை இப்படி ஒரு நாடக அமைப்பு லண்டனில் இயங்கி வருவது எனக்குத் தெரியாது. ஆனால் அதன் இயக்குனர்களாக இருக்கும் சாம்பிரதீபனையும் றஜித்தாவையும் ஊடக வேலைகள் சார்பாக நான் ஏற்கனவே நன்கு அறிவேன்.

தமிழரல்லாத பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும், ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வை பெரும்பாலும் இலங்கை, இந்திய மற்றும் உலகு சார் மனித உரிமைகள் பற்றிய தகவல்களும் சிறப்புப் பேச்சுகளும் ஆழமாய் அலங்கரித்திருந்தன. 

காட்சிப்புலத்தினூடாக அன்று அங்கு வந்திருந்த அத்தனை பேரையும், இலங்கையின் அடிப்படை மனித உரிமைகளின் இயங்கு நிலை குறித்தான ஒரு அவதானத்துக்கு இழுத்து வந்து விட்டிருந்தது      “THE INVISIBLE WALL” என ஆங்கிலப் பெயரிடப்பட்ட “தோன்றாச் சுவர்” நாடகம். இப்படி ஒரு நாடகத் தயாரிப்பை அப்படி ஒரு நிகழ்வில் மிகப் பொருத்தமாக உருவாக்கிக்கொண்டுவரும் எண்ணத்தை தமக்குள் கொண்டிருந்த தமிழர் தகவல் நடுவத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

உயிர் வாழும் உரிமை,சொந்த மொழி பேசும் உரிமை, கல்வி கற்கும் உரிமை என்ற மிக அடிப்படையான மனித உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வின் வலிகளை காட்சிகளின் நீட்சிகளில் பார்வையாளர் முன் கொண்டு வந்திருந்தது நாடகம்.

ஒரு யுத்தக் கிணறு, அந்த கிணற்றுக்கு சொந்தமான  ஒரு யுத்த பூதம்,ஒரு மனித உரிமைப் பந்து, ஒரு குடும்பத்து உறவு வட்டம் என்ற நான்கு குறியீட்டுக் காண்பியங்களூடாக இருபது நிமிடங்கள் நீண்ட இந்த “தோன்றாச் சுவர்” அலட்டலில்லாமல் அழகாக,அளவாக தான் சொல்ல வந்த கருத்தை சரியான இடத்தில் சரியான இலக்குதாரருக்கு சொல்லிச் சென்றது என்றுதான் சொல்லவேண்டும்.

உடல் மொழிகளும், இசை மொழிகளும், காட்சிப் பொருட்களும், பாத்திரங்களின் தோறணைகளும் வார்த்தைகள் செய்ய முடியாத காத்திரமான உணர்வுகளை கிளறிவிட்டிருந்தன. யுத்தக்கிணற்றுக்குள் அலறி எழுந்து வெளித்தெரியும் வெற்றுக்கைகளும், மேடையில் மனித உரிமைப் பந்தை தன் கையில் வைத்திருந்தபடி அமர்ந்திருந்த யுத்தபூதத்தின் வெளிப்பாடும் எடுத்த எடுப்பிலேயே தோன்றாச் சுவருக்குள் எல்லோரையும் எட்டிப்பார்க்க வைத்தபடி பல கதைகளைச் சொன்னபடியிருந்தது.

வயல், கடல் என வளம்மிக்க ஒரு இனத்தின் வாழ்வைச் சொன்ன விதமும், அம்புலி காட்டி அமுதூட்டும் எமது தடங்களை மீட்ட முறைமையும், மேடையில் குருகுமணல் கொட்டி அகரம் எழுதப் பழக்கிய காலங்களை கண்முன் கொண்டுவந்தமையும், தனிச் சிங்களச் சட்டம் என்ற மொழித்திணிப்பு மக்களைப் புரட்டிப்போட்டதை வெளிக்கொணர்ந்த பாங்கும், ஒரு குடும்பத்தலைவன் உயிர்வாழும் உரிமை மறுக்கப்பட்டு கொல்லப்பட்டால் வறுமை தின்னும் குடும்பத்தின் வலிகளைக் காட்டிய தத்துரூபமும், வறுமைக்குள் குழந்தைத் தொழிலாளிகளை உருவாக்கி கல்வியை யுத்தக்கிணறு மிகக்கவனமாய் கபளீகரம் செய்யும் அரசியலை சொல்லாமல் சொன்ன விதமும், மிக அருமையாகப் பின்னி எடுக்கப்பட்ட கதைக்கருவாக நெஞ்சைத் தொட்டது.

ஒரு சில பின்னணிப் பாடல் வரிகள் தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தாலும், ஒட்டுமொத்த கதையையும் வலியையும் தமிழரல்லாதவர்கள் புரிந்து கொள்வதற்கு இடறல் இல்லாத ஒரு மொழியற்ற நாடகம் என்ற வகையில் தோன்றாச் சுவர் பெருங் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஒதுக்கப்பட்ட மேடையின் பரப்பளவு இந்த நாடகத்தின் பெருவீச்சுக்கு சற்று இடைஞ்சலாக இருந்தது போல ஒரு தோற்றம் நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது எனக்குள் எழுந்தது என்னவோ உண்மைதான்.  எல்லாவற்றையும் தாண்டி “தோன்றாச் சுவர்” எல்லா தமிழ் மக்கள் முன்னும் ஒரு முறை தோன்ற வேண்டிய நாடகம் என்பது எனது மனப்பதிவு. மெய்வெளிக்கு எனது பாராட்டுக்கள். அவர்களது நாடகத்தை அன்று ஒழுங்கு செய்த  தமிழர் தகவல் நடுவத்துக்கு எனது நன்றிகள்.

- மகேன் பஞ்சலிங்கம் -


134 views0 comments
bottom of page