“கலைகளோடு ஈடுபடுபவர்கள் மானுட முழுமைக்கான வாசல்களை எப்போதும் திறந்து விடுகிறார்கள்” - செ.குமரன்
“வெளி நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒரு ஈடுபாட்டுத் தளத்தினை மெய்வெளி அமைத்துக் கொடுத்திருக்கின்றது”
கடந்த யூன் மாதம் 7ம் திகதி வெள்ளிக்கிழமை London Hayes பகுதியில் இடம்பெற்ற மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த அவைக்காற்றுகை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட
IBC தமிழ் ஊடகத்தின் பக்தி அலைவரிசைப் பணிப்பாளர் திரு. செ.குமரன் அவர்கள் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
கலைகளும் கலைகளோடு ஈடுபடுபவர்களும் மானுட முழுமைக்கான வாசல்களை எப்போதும் திறந்து விடுகிறார்கள். குறிப்பாக நாடகக் கலையில் ஈடுபடும் கலைஞர்களுக்கு அந்த விரியம் இன்னும் அதிகமாகவே இருக்கின்றது. அந்த வீரியத்தோடு வளர, வெளி நாடுகளில் வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒரு நாடக ஈடுபாட்டுத் தளத்தினை மெய்வெளி அமைத்துக் கொடுத்திருப்பது எனக்கு மிகவும்
மன நிறைவைக் கொடுக்கின்றது.
நான் எனது சிறு வயதில் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன். இப்போது போல அந்த காலங்களில் என்னால் பலர் முன்னிலையில் நின்று எனது எண்ணங்களைப் பேச இயலாதிருந்தது. யாழ். திருமறைக்கலாமன்றத்தின் இத்தகைய நாடகப் பயிற்சிகளால் தான் நான் வேறு ஒரு ஆளுமைக்குரிதவனாக மாறியிருந்தேன் என்பதை இந்த இடத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். நாடகம் தனியே நாடகத்தை நாடகத்துக்காகக் கற்றுக்கொடுக்கின்ற பணியை செய்வதாக நான் நம்பவில்லை. அது முழு மனித ஆளுமையில் மெல்ல மெல்ல செல்வாக்கு செலுத்தக்கூடியது. மனிதனை மனிதனாக தூக்கி நிறுத்தக்கூடியது. வாழ்வோடு எதிர் நீச்சல் போட்டு சவால்களின் மீது வெற்றி கொள்ள வைப்பது. நீங்கள் இந்த துறையை கற்றலுக்காக தேர்ந்தெடுத்த இந்த வயது மிகப் பொருத்தமானது என நான் நினைக்கின்றேன். இப்போது உங்களிக்குள் நுழையத்தொடங்கும் இந்த பயிற்சிகளின் பலாபலன்களை எதிர்காலத்தில் நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள். நாடகம் உங்களுக்கான பாதைகளை உங்களுக்கு முன்னே உருவாக்கி உருவாக்கி செல்லும்.
அழைக்கப்பட்ட நேரத்திற்கு சற்று முன்னராகவே இன்றைய நிகழ்வுக்கு நான் வந்திருந்தமையால், இன்று உங்களுடைய பயிற்சி ஈடுபாடுகளை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது. உங்கள் ஒவ்வொருவரின் முகங்களிலும் அத்தனை மலர்ச்சிகளை என்னால் பார்க்க முடிந்திருந்தது. உங்கள் உடல்களில் அவ்வளவு உற்சாகம் திரண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தயக்கம் இல்லாது தற்துணிவோடு நீங்கள் ஈடுபட்ட ஒவ்வொரு செயல்களையும் நேரடியாக காண முடிந்தது. தாளக்கட்டுகள், பாடல்கள், உடல் அசைவுகள், முக பாவங்கள், உச்சரிப்புத் தொனிகள் என செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிற்பங்களாக நீங்கள் இங்கு இயங்கிக்கொண்டிருந்தீர்கள்.
எல்லோரையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
மிக அழகான தேவையான இந்த பணியினை மிகச் சிரத்தையோடு ஆற்றும் மெய்வெளி நிர்வாகத்தை பாராட்டுவதோடு என் மனதில் இருக்கும் ஒரு விண்ணப்பத்தையும் அவர்களுக்கு தெரிவிக்கலாம் என நினைக்கிறேன். இந்த பயிற்சி நெறிகளை ஒரு பரீட்சை அலகுக்கு உட்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றுடன் இணைத்து
UCAS புள்ளிகளை பயிற்சியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பயில்நெறியாக மாற்ற முயற்சி எடுக்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு இன்றைய தினம்
பாராட்டுச் சான்றிதழ் பெறும் மெய்வெளியின்
“மே மாத நட்சத்திரம்” செல்வி பூர்வஜா சிவகுமாரையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.