“கற்றலுக்கு குறுக்குவழிகள் எப்போதும் இருந்தது கிடையாது.” - Dr. நித்தியானந்தன் -
Updated: Nov 5, 2020
கடந்த வெள்ளிக்கிழமை 31 ஜனவரி 2020 அன்று மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த அவைக்காற்றுகை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த மதிப்புக்குரிய
Dr. நித்தியானந்தன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
லண்டனில் இயங்கி வரும் மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த அவைக்காற்றுகை நிகழ்வானது கடந்த 31.01.2020 வெள்ளியன்று Hayes பகுதியில் அமைந்துள்ள Barnhill community high School இல் நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் மாலை 8.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்த
RATNAM FOUNDATION தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், லண்டனில் தமிழ் மொழிக் கற்கை நெறிகளுக்கு பல காலம் பணியாற்றியவருமாகிய Dr. நித்தியானந்தன் அவர்கள் சிறப்புரை ஒன்றை ஆற்றியிருந்தார்.
பயிற்சியாளர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தனது கற்றல் கற்பித்தல் அனுபவங்களில் இருந்து பல விடயங்களை மிகச் சுவாரஸ்யமாக தனது உரையில் குறிப்பிட்டிருந்த Dr. நித்தியானந்தன், “கற்றலுக்கு குறுக்குவழிகள் எப்போதும் இருந்தது கிடையாது.” என்று ஆரம்பித்து காலத்திற்கேற்ப பல சங்கதிகளை அங்கு மேற்கோள்காட்டியிருந்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஆயிரக்கணக்கான மாணவர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் என் வாழ்வில் நான் சந்தித்திருக்கிறேன். பல பாடசாலைகளை என் வாழ் நாளில் நான் நிர்வகித்திருக்கின்றேன். அந்த அனுபவத்தினூடாக உங்களுக்கு சொல்கிறேன். அசுர வேகத்தில் அவதி அவதியாக கற்க முனையும் எந்தத்துறைகளும் நன்மைகளை எமக்குத் தந்துவிடாது. அத்திவாரம் இடுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளுங்கள். அவதி அவதியாய் நீங்கள் கட்டிடங்களை கவர்ச்சியாய் காண விரும்பினால் அத்திவாரங்களுக்கான நேர்த்தி குறைந்து பலவீனமான கட்டிடங்களின் நடுவே நாங்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டி வரும். கற்றலுக்கும் ஆளுமைகளை உங்களுடையதாக்கிக்கொள்வதற்குமான தளங்கள் திறக்கப்படும் போதெல்லாம் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவை உங்களை நிச்சயம் தரமுயர்த்தும்.
எனது சிறு வயதில், ஆசிரியராக இருந்த எனது தந்தை எனக்கும் என் சக மாணவர்களுக்கும் அமைத்துத் தந்த மேடைக் களங்களே மக்கள் முன் நான் அச்சமற்று நின்று எனது எண்ணங்களைச் சொல்வதற்கு எனக்கு தைரியம் தந்திருந்தது. அந்தக் காலத்தில் அவர் நடத்திய மாணவர்களுக்கான
பேச்சுப் போட்டிகளில் நான் கலந்து கொள்ளத் தவறியிருந்தால் இப்போது உங்கள் முன் பேசிக்கொண்டிருக்கும் இந்த வாய்ப்புக்கூட எனக்குக் கிடைத்திருக்காது.
எனவே களங்கள் அமையும் போது அவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதே மிக அவசியமானது.
இப்போதெல்லாம் அதிகமான பெற்றோர்களும் மாணவர்களும் இன்று அடவுகளுக்கு காலைத் தூக்கி பழகிவிட்டு அடுத்தவாரம் அரங்கேற வேண்டும் என்றே பெருப்பாலும் விரும்புகிறார்கள். இது கலைகளில் உச்சம் தொடுவதற்கான ஒரு குறுக்குவழியென்று அவர்கள் நினைக்கிறார்கள். உங்களுக்கு நான் சொல்கிறேன் கற்றலுக்கு குறுக்குவழிகள் எப்போதும் இருந்தது கிடையாது. வரன்முறையாக கற்றுக்கொள்வதே கசடறக் கற்பதற்கான ஒரே வழி ஆகும்.
ஆகவே குழந்தைகளை எந்தத் துறைக்கு விட்டாலும் அந்தத் துறையின் அத்திவாரம் இடலுக்கு அதிக காலம் பொறுமையுடன் இருங்கள். மிக மிக மெதுவாகத்தான் அத்திவாரங்களை இடமுடியும். அவை பலமாக இடப்பட்டபின்னர் கட்டடங்களை அசுர வேகத்தில் மிக கவர்ச்சியாக கட்டி எழுப்ப் முடியும்.
மெய்வெளி நாடகப் பயிலகம் சம காலத்தில் எமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு அருமையானதொரு
நிகழ்களம் என்றே நான் சொல்வேன்.
மூன்று வெவ்வேறு விதமான அளிக்கைகளை இன்று நான் இங்கு பார்த்தேன். உடலுக்கும், மனதுக்கும், கற்பனைத் திறனுக்கும் அத்தனை பரிமாணம் கொடுத்து அளிக்கை செய்திருந்தார்கள். அத்தனை குழந்தைகளுக்கும் எனது பாராட்டுக்கள்.”
என்று கூறி தனது மகிழ்ச்சியை அங்கு வந்திருந்த அனைவருடனும் பகிர்ந்திருந்தார்.
Comments