மெய்வெளி நாடக பயிலகமும் இரு ஆளுமைகளும். - வே.கெங்கேஸ் -
Updated: Feb 22, 2019
02.02.2019 அன்று லண்டனில் மெய்வெளி நாடக பயிலகம் கலைஞர்கள், கல்விமான்கள், ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்களின் பங்களிப்புடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது
.வெறுமனே நான்கு வசனங்களை மட்டுமே ஒப்புவிப்பது நாடகக் கல்வி அல்ல.
தன்னை பரிமாறிக் கொள்வதிலும், தன் ஆளுமைகளை வளர்த்தெடுப்பதிலும், மனிதனை மேன்மையானவனாக ஆக்குவதிலும் நாடகம் மற்ற கலைகளை விட உன்னதமாக இருக்கிறது.
புலம்பெயர் தேசத்தின் கட்டிட காடுகளின் வீட்டுக்குள் இருந்து கொண்டு அண்டை வீட்டுப் பக்கமும் நண்பர்களைத் தேடிக் கொள்ள முடியாத நிலையில் தனித்து விடப்பட்ட சிறார்களுக்கு உயிரற்ற கணணி விளையாட்டும், தொலைபேசியும், தொலைக்காட்சி நிகழ்வும் மனநிறைவை ஓய்வை தருகின்றன என நினைக்கிறார்கள். ஆனால் சிறார்களுக்கான இயற்கை பெருவெளிகள் அடைக்கப்பட்டு உடல் மனதளவில் சிதைக்கப்பட்டு மனமும் உடலும் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்ட நிலையில் படிப்பு மூட்டைகளை மட்டுமே சுமந்து செல்லும் அடிமைத்தனம் சிறார்கள் மத்தியில் காணப்படுகிறது. இந்த கொடூர வன்மங்களில் இருந்து இந்த பிஞ்சு உள்ளங்களை மீட்டெடுக்கும் கல்வி நாடகத்தால் மட்டுமே முடியும். நாடகத்தின் வழியாக கற்றல் என்ற ஓர் உயர் நோக்கு தேவைப்படுகிறது.
இந்த உயர்ந்த நோக்கை நிவர்த்தி செய்யவும் வருங்காலச் சந்ததியின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும் இரு ஆளுமைகளான சாம் பிரதீபன்.சாம் பிரதீபன் ரஜித்தா ஆகியவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மெய் வெளி நாடக பயிலகம் நாடகம் மட்டும் இல்லாமல் ஒரு மணிதனை ஆளுமை உள்ளவனாக, தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவனாக, நல்ல மனிதனாக ஆக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக அவர்களுடைய மாணவனாக அவர்களுடன் பயணித்திருக்கிறேன்.
இருபது வருடத்திற்கு மேலாக இன்று வரைக்கும் நான் அரங்க செயற்பாட்டில் இருக்கிறேன் என்றாள் அதற்கு முழு காரணம் சாம் அண்ணா ரஜித்தா அக்கா என்பதனை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் மட்டுமல்ல என்னைப் போன்று பலர் அரங்க செயற்பாட்டிலும் தனிமனித வாழ்விலும் தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இவர்களுடைய அரங்கு சம்மந்தமான ஆளுமையே. இவர்களுடன் இலங்கை முழுவதும் அவர்களுடைய மாணவனாக பல இடங்களுக்கு பயணித்துன்டு பல நிகழ்வுகள் பல பயிற்சி பட்டறைகள், பயிற்சி பாசறைகள் அவர்கள் செய்ததுண்டு அதை வைத்துக் கொண்டே சொல்லுகிறேன் இவர்களுடைய ஆளுமையை.
இவர்களைப் பற்றி இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இத்துடன் நிறுத்திக்கொண்டு இந்த மெய்வெளி நாடக பயிலகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவனுக்கு
1.வேகமும்,ஆழமும் நிறைந்த கற்பனைத்திறன் மற்றும் செயற்பாட்டுத் திறன் அதிகரிக்கும். 2. ஆற்றல் நிறைந்த அவதானத்தை வளர்த்து அறிய வேண்டியவற்றை தெரிந்து விரைந்து அவதானிக்கும் பண்பு அதிகரிக்கும். 3. செய்யும் கர்மத்தில் கருத்தூன்றி நிற்கும் பழக்கம் 4. மன இறுக்கம் கலைந்து இயற்கையாகவே உற்சாகம் பெறுவார்கள். 5. அச்சம், பயம், படபடப்பு, கூச்சம் இல்லாமல் போய் தனி ஆற்றல் பெறுவார்கள். 6. தெளிவான பேச்சு,உறுதியான கருத்துக்களை எடுத்துரைக்கும் தன்மை துணிவோடு பதில் சொல்லும் தன்மை 7. வாசிப்புத் திறன் அதிகரிக்கும், குழு உணர்வு செயற்பாட்டு முறை ,நடைமுறை ஒழுக்கம் அனைத்து காரியங்களிலும் ஈடுபாடு, தலைமைத்துவப் பண்புகள், கடின உழைப்பு , பொறுப்புணர்வு ,தன் மதிப்பு உயர உதவுதல், சக மாணவன் குறித்து புரிந்துணர்வு என்பவை காணக்கூடியதாக இருக்கும். 8. இதுமட்டுமில்லாமல் படைப்பாற்றல் பெருகி கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவர். இதில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இவைகள் அனைத்தும் அரங்க விளையாட்டின் மூலமே மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்.
இதுபோன்று ஒரு மாணவனுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த மெய்வெளி நாடக பயிலகத்தை லண்டனில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் எனில் வருங்கால சந்ததியினர் நல்ல ஆளுமையுள்ளவர்களாக, தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவர்களாக நல்ல மனிதர்களாக சமூகத்தில் மிளிருவார்கள் என்பது திண்ணம்.
இந்த மெய்வழி நாடக பயிலகம் திறம்பட செயல்பட எல்லோருக்கும் எல்லாமாய் இருக்கின்ற அந்த இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு சாம் அண்ணாவுக்கும், ரஜித்தா அக்காவுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Comments