top of page

மெய்வெளி நாடகப்பள்ளி இந்த நேரத்தில் “breath of fresh air” -கெளறி பரா-


02/02/2019 அன்று சாம் பிரதீபன் மற்றும் அவர் துணைவி றஜித்தா சாம் பிரதீபனால்

மெய்வெளி நாடகப்பயிலக ஆரம்ப விழா Hayes நகரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் நாடகக்கலையை அடுத்த சந்ததிக்கு கடத்தும் நோக்குடன் ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் முயற்சி இதுவாக இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.

ஊரில் கோயில் திருவிழா முடிவில் பொதுவாக நாடகங்கள் அரங்கேறும் . காத்தவராயன் கூத்து மற்றும் அரிச்சந்திரன் நாடகம், இது எனக்கோர் பழைய பிறவி நினைவு போல மூளையின் ஒரு மூலையில் மங்கலாக உள்ளதே தவிர இவைகள் பற்றிய காத்திரமான அறிவோ நினைவோ இல்லை.

இங்கு தமிழ் பள்ளிகள். நடத்தும் கலைவிழாக்களில் நாடகம், நடிப்பு , வில்லுப்பாட்டு, கூத்து என்ற வகையறாக்கள் ஏதும் சுத்தமாக இல்லை.

தமிழ் சினிமா படங்கள் தொடங்கும் போது வரும் ஐட்டம் song அல்லது குத்துப்பாட்டுக்கு பிள்ளைகள் ஆடுவார்கள், அதன் முடிவில் தமிழ்க்கலைகளை வளர்க்கிறோம் என்று வாய் கூசாமல் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நடத்துனர்கள் பேசுவார்கள். சிவனே என்று உக்காரந்து கேட்டு விட்டு வருவோம்.

மெய்வெளி நாடகப்பள்ளி இந்த நேரத்தில் “breath of fresh air” என்று சொல்லும் வகையில் நம்மிடையே உதித்திருக்கிறது. வரவேற்க தக்கதும் பாராட்டதக்கதுமான முயற்சி.

மெய்வெளி நாடக்ப்பயிலக விழா சற்றே புதுமையான விழாவாக இருந்தது. கோயில் தேருக்கு கூடும் மக்கள் கூட்டம் ஏதும் இல்லை, இருப்பினும் விழாவை கன கச்சிதமாக சாம் மற்றும் அவர் துணைவி றஜித்தா நெறிப்படுத்தியிருந்தார்கள். பல வகையான கூத்துக்களை ஏற்கனவே பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் மூலம் நடித்து காட்டியிருந்தார்கள். விழா தொடங்கி முடியும் வரை சிரிப்பிற்கும் கலகலப்பிற்கும் குறைவில்லாமல் இருந்தது.

மேலும் நாடகம் நடிப்பு பற்றி பல பேச்சாளர்கள் அறிவுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் உரையாற்றினார்கள்.

நாடகம் மற்றும் கூத்துக்கலை பற்றி பல சுவையான தகவல்களை அறியவும் இந்நாடக பயிலக விழா வழி செய்தது.

மெய்வெளி நாடகப்பள்ளி மென்மேலும் வளர்ந்து சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்



45 views0 comments

コメント


bottom of page