top of page

"மெய்வெளி” நாடகப் பயிலகத்தின் அரங்கியல் கற்கை நெறிகளும் பயிற்சிப் பட்டறைகளும் தருபவை எவை?

Updated: Mar 30, 2019

"மெய்வெளி” நாடகப் பயிலகத்தின்அரங்கியல் கற்கை நெறிகளும் பயிற்சிப் பட்டறைகளும் தருபவை எவை?தன்னம்பிக்கை :கற்கை நெறிகளின் போதும் அரங்க அளிக்கைகளின் போதும் பயிற்சியாளர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள், 

அவர்களுடைய ஆற்றல்கள் மற்றும் கலை நுட்பங்கள் மீது அவர்களுக்கே மிகப் பெரும் நம்பிக்கையை வளர்க்க உதவுகின்றது.

அந்த நம்பிக்கையை அவர்கள் தங்களின் எதிர்கால வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் பிரயோகிக்கத் தொடங்குவார்கள். அது உயர்ந்த தன்னம்பிக்கை உள்ளவர்களாக அவர்களை சமுகத்தில் உருவாக்கித் தருகின்றது.


கற்பனா சக்தி :
தொழில் நுட்பங்களுக்கு அடிமையாக்கப்பட்ட உலகத்தில் இருந்து மானுட நேசிப்புடன் வெளியே செல்வதற்கான வழிகளை, நாடக அரங்கு தன் பயிற்சியாளர்களுக்கு உருவாகித்தருகின்றது. 

படைப்பாக்கத் திறன், புதிய அணுகுமுறைகளைக் கண்டடைவதற்கான சிந்தனைத் திறன், எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான மதிநுட்பம் 

போன்றவைகளை ஈடுபாட்டாளர்களுக்கு அரங்கு சாத்தியமாக்கிக் கொடுக்கின்றது.


சக மனிதனை புரிந்துகொள்ளலும் சகிப்புத்தன்மையும் :வேறுபட்ட காலச்சூழல், மாற்பட்ட உணர்வுச்சூழல், பல்வகைப்பட்ட கலாசாரம் மற்றும் பண்பாட்டுச் சூழல் சார்ந்த நாடக பாத்திரங்களை உள்வாங்கி நடிபாகம் ஏற்று நடிக்கும் அனுபவங்கள், சக மனிதன் மீதான இரக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் அரங்கப் பயிற்சியாளனுக்கு ஏற்படுத்துகின்றது.


கூட்டாக செயற்படுதலும் இணைந்து செயலாற்றுதலும் :
படைப்பாக்கத் திறனும் கற்பனை வளமும் பலருடைய கூட்டிணைவின் மூலம்  வடிவம் பெறும் போது பல பிரமாண்டங்களை உருவாக்க வல்லது.

அரங்கப் பயிற்சிகளில் இந்த கூட்டிணைவு பயிற்சியாளர்களுக்கு இயல்பாக கிடைக்கிறது.


மன ஒருங்கிணைவு : நாடக ஒத்திகைகள், அரங்க அளிக்கைகள், இதர அரங்குசார் பயிற்சிகள், அரங்க விளையாட்டுகள் போன்றன மன ஒருங்கிணைவுக்கான மிகச் சிறந்த பயிற்சிகளை தொடர்ச்சியாக வழங்கக்கூடியன.

மனம், உடல், குரல் என பல விடயங்களினூடு 

புலன்களை ஒருநிலைப்படுத்த உதவும் அரங்கச் செயற்பாடுகள், அரங்குக்கு வெளியே சிறுவர்களின் பாடசாலைக் கல்வி தொடக்கம் வாழ்வின் பல்வேறு தருணங்களில் அவர்களுக்கு பயனளிக்கக்கூடியன.


தொடர்பாடல் திறன் :தொடர்ச்சியான நாடக ஈடுபாடு பயிற்சியாளர்களுக்கான தொடர்பாடல் திறனை மேம்படுத்துகின்றது. வார்த்தை ரீதியான உரையாடல் நுட்பங்களையும், உடல் மொழிப் பிரயோகத்தையும் நன்கு வளப்படுத்துவதோடு மற்றவர்களை கவரக்கூடிய பேச்சாற்றல், குரல் வெளிப்பாட்டில் நேர்த்தி, சரளமான மொழிப் பிரயோகம் போன்றவற்றையும் ஈடுபாட்டாளர்களுக்கு ஏற்படுத்துகின்றது.


முரண் களையும் ஆற்றலும் தீர்மானம் எடுக்கும் திறனும் :நேர்த்தியான தொடர் அரங்கப் பயிற்சிகள் தரும் மற்றுமொன்று, 

“முரண் களையும் ஆற்றலும் தீர்மானம் எடுக்கும் திறனும்” ஆகும்.

யாருடன், ஏன், எதை, எங்கே, எப்போது, எப்படி பேச வேண்டும் என்ற கலைத்துவத்தை அரங்கிற்கூடாக பயிற்சியாளர்கள் பெற்றுக் கொள்வதோடு, ஒரு இக்கட்டான சூழலில் இருந்து வெளிவருவதற்கு புதிய வியூகங்களை அந்தந்தக் கணங்களில் உருவாக்கிக் கொள்ளவும், விரைந்த சுய சிந்தனையுடன் சிக்கல்களுக்கு தீர்வுகளை கண்டுகொள்ளவும் இந்த பயிற்சிகள் ஈடுபாட்டாளர்களைத் தயார்ப்படுத்துகின்றன.


மகிழ்வளிப்பு :“மகிழ்ந்திருத்தல்” என்ற வாழ்வின் மிகப் பிரதான அம்சத்தை அரங்கு தன் ஈடுபாட்டாளர்களுக்கு மிக லாவகமாகத் தந்துவிடுகிறது. அரங்கும் அது சார்ந்த அளிக்கைப் பண்புகளும் களிப்பூட்டலுடன் கூடிய நகைச்சுவை உணர்வுகளை ஈடுபாட்டாளர்களிடம் ஏற்படுத்தி மன அழுத்தங்களில் இருந்து விடுபடவும் பதட்டங்களில் இருந்து  தள்ளி நிற்கவும் உதவுகிறது.


மன உறுதியும் நம்பிக்கையும் :மனிதனில் மனிதன் நம்பிக்கை கொள்ளும் உன்னதங்களை இழந்து வரும் இக்காலங்களில் அரங்கின் தேவை முன்னரைவிட அதிகமாகின்றது. சக மனிதனோடு உரையாடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நல்லுறவை வளர்த்துக்கொள்வதற்கு

“உயர் நம்பிக்கை” என்பது மிக அவசியமாகின்றது. இந்த நம்பிக்கை தன்னில் தான் நம்பிக்கை வைப்பதில் இருந்து தொடங்கி அடுத்தவனில் நம்பிக்கை கொள்வது வரை நீளுகின்றது. தனது ஆற்றல்களிலும் ஆளுமைகளிலும் நம்பிக்கையினை ஏற்படுத்துவதில் தொடங்கி அடுத்தவனை உயர் நம்பிக்கையுடன் அங்கீகரிப்பதுவரை அரங்கின் ஊடாட்டம் பயிற்றுவிக்கின்றது.


ஞாபக சக்தி :ஒழுங்குபடுத்தப்பட்ட ஒத்திகைகள், நாடக  வசனங்களை ஒப்புவித்தல்கள், அளிக்கைகளில் ஈடுபடுதல்கள் போன்றன இயல்பான ஞாபகசக்தியை மேலும் கூர்மைப்படுத்த உதவுகின்றது.


சமுக விழிப்புணர்வு :நாடகக் கலைக்கு பயன்படுத்தப்படும் புராணக் கதைகள், இலக்கியங்கள், மரபு சார் ஐதீகங்கள், கவிதைகள், புனைகதைகள், நடப்பியல் கலந்துரையாடல்கள் போன்றன சமுக முரண்கள் பற்றிய மிகப் பெரிய புரிதலையும் தெளிவையும் ஈடுபாட்டாளர்களுக்கு கொடுக்கும் வல்லமையை கொண்டுள்ளது.

உலகத்தின் பல இனக்குழுமங்களின் முன்னைய மற்றும் தற்போதைய கலாசார, பண்பாட்டு, சமய, சமுக மூலக்கூறுகளின் முட்டிமோதல்களை ஒரு தார்மீக மனித நேயத் தளத்தில் புரிந்துகொள்ள அரங்கு பெரும் தளம் கொடுக்கின்றது.


சாம் பிரதீபன்

இயக்குனர்

“மெய்வெளி” நாடகப் பயிலகம்

131 views0 comments

Comments


bottom of page