top of page
Writer's pictureDirector

ஒரு உன்னதமான வாழ்க்கைப் பயிற்சிக்கான பாடசாலை இது! - அமல்ராஜ் -



“வீணாப் போப்போறாய்டா” என அம்மா திட்ட திட்ட திருமறைக்கலா மன்றத்தின் வாசலில் போய் கிடந்த காலம் அது. அம்மாவின் புரிதலிலும் பிழையில்லை. உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது நாடகம், கூத்து, எழுத்து என்று திரிந்தால் அது என்னை படிப்பு என்கின்ற தளத்திலிருந்து இழுத்துக்கொண்டுபோய் ஒரு இருண்ட காட்டிற்குள் எறிந்துவிடும் என்பது அவருடைய பரிதவிப்பு. புரிந்தாலும், திருமறைக் கலாமன்ற வாயிலை என்னால் புறந்தள்ளிவைக்க முடியவில்லை. அதைக் கடந்து போகும் போதெல்லாம் என்னை தன்பால் இழுத்துக்கொண்டேயிருக்கும். தவிர்க்க முடியாத காந்த விசை அது.


அங்குதான் Sam Pratheepan அண்ணாவையும் Premalatha Sam Pratheepan (Rajitha) ரஜித்தா அக்காவையும் முதன்முதல் சந்தித்தேன். இரண்டும் மிகப் பெரும் ஆளுமைகள். கலைமகள் ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்து வந்த அதிசயத்தை இந்த இரண்டு பேரிடம்தான் பார்க்க முடியும். அதுவொரு அரங்க பயிற்சிப் பட்டறை. மன்னார் YMCA மண்டபத்தில் நடந்தது. அப்பயிற்சிப் பட்டறையின் வளவாளர்கள் சாம் அண்ணாவும் ரஜித்தா அக்காவும். கவனிக்க, அப்பொழுது இருவருக்கும் திருமணமாகியிருக்கவில்லை. பயிற்சிப் பட்டறை முடிவில், “இவங்க ரெண்டு பேரும் கலியாணம் கட்டிக்கிட்டா எப்பிடி இருக்கும் என்ன...” என்று இணைப்பாளரிடம் அதிக பிரசங்கித்தனமாக வாயைப் பிளந்தபோது தலையில் கனமாக ஒரு குட்டு விழுந்தது. அது பற்றி பிரஸ்தாபிக்க தகுதியற்ற வயது என்பதாலோ என்னவோ. பல வருடங்களின் பின்னர், அது அப்படியே - என் ஆசைபோல - நிகழ்ந்தபோது, என்னுடைய சந்தோஷத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. மகிழ்ச்சி. கொண்டாட்டம். சாம் அண்ணாவுக்கு தோதான துணை ரஜித்தா அக்கா மட்டும்தான் என்பது எனக்குள் அன்றே பதிந்துவிட்ட ஒன்று. கலையின் இருபெரும் சாம்ராஜ்யங்களை ஒன்றாக்குவது காலத்தின் தேவை. சிருஷ்டியின் நேர்த்தியான திட்டமிடல். எங்களுக்கு மாபெரும் கொண்டாட்டம்!


சரி, நாடகப் பயிற்சிப் பட்டறைக்கு வருவோம். அப்போதெல்லாம் - இப்ப மட்டும் என்னவாம்? - அரங்க ஆற்றுகை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மனிதர்கள் முன் எழுந்து நின்று பேச லஜ்ஜையாக இருக்கும். வார்த்தைகள் அங்கங்கு முடிந்துகொள்ளும். நாவு சரளமாக ஓடாது. பயம். கூட்டத்திற்கு முன்னால் விரல் அசைப்பதற்குக் கூட பெரும் கிலியாக இருக்கும். நாடகம், நடிப்பு இரத்தத்தில் இருந்தாலும் அது ஒரு வெளிப்பாடாக வராது. கூச்சம் ஆளைத் தின்னும். தொண்டை வரண்டு வசனம் காய்ந்து போகும். இப்படியிருக்கும் போதுதான் சாம் அண்ணாவும் ரஜிதா அக்காவும் தங்கள் வித்தைகளை என்மீது இறக்கினார்கள். நாடகம், அரங்கம் பற்றி ஒரு பேரொளியை எனக்குள் பாய்ச்சியவர்கள் இவர்கள் இருவரும்தான்.

இப்பொழுதெல்லாம் நாடகம், கூத்து போன்ற எங்கள் தனித்துவ அடையாளமாக விளங்கும் கலை வடிவங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருப்பது பெரும் மன வேதனையாக இருக்கிறது. இசை, திரைப்படத் துறை, ஏன் இலக்கியம்கூட முன்னெடுக்கப்படும் வீச்சு, நாடகம், கூத்து போன்ற கலைவடிவங்களுக்கு இல்லை. எனக்குத் தெரிந்து ஜோன்சன் ராஜ்குமார், சாம் பிரதீபன் போன்ற நாடக-கூத்து ஆளுமைகளிடமிருந்து நம்முடைய இளைய சமூகம் எதையும் பிடுங்கிக்கொள்ளவில்லை. என்னுடைய மகன் இன்னும் பத்து வருடங்களில் கேட்கப்போகும் “வட் இஸ் கூத்து அப்பா?” என்கின்ற கேள்வியை கற்பிதம் செய்துபார்த்தால் இப்பொழுதே தொண்டை அடைக்கிறது.

காலத்தின் தேவை கனமானது. இந்த சுதேச கலையை அடுத்த தலைமுறையினருக்குச் சரியாக கடத்தும் மாபெரும் கடமை எங்கள் அனைவருக்கும் உண்டு. இதில் நாங்கள் தவறிழைக்க முடியாது. இந்தக் கலையை இன்னும் அதே வேகத்தோடு நிகழ்த்திக்கொண்டிருக்கும் சாம் அண்ணா, ஷோபா சக்தி போன்றவர்கள் ஆயிரம் முத்தங்களிற்கு உரித்துடையவர்கள். அவர்களை தொடர்வதும், கரங்களைப் பலப்படுத்துவதும் காலத்தின் பொருட்டு அவசியமான காரியங்கள்.

இதன் அடுத்த கட்டமாக, இன்று சாம் பிரதீபன் அண்ணா தன்னுடைய “மெய் வெளி” என்கின்ற நாடக பயிலகத்தை ஆரம்பிக்கிறார். கொண்டாடப்பட வேண்டிய முயற்சி. எங்களுடைய கரங்களைக் கொடுத்து நீண்ட தூரம் தூக்கி எடுத்துச்செல்ல வேண்டிய செயற்பாடு. சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு இங்கு கற்றுக்கொள்ள ஏராளமான விடயங்கள் உண்டு. இங்கு நாடகம், நடிப்பு போன்றவற்றைத் தாண்டி ஏகப்பட்ட சுய ஆளுமை விருத்திக்கான செயற்பாடுகள் உண்டு. ஒரு உன்னதமான வாழ்க்கைப் பயிற்சிக்கான பாடசாலை இது. நண்பர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளின் priority லிஸ்டில் இதையும் கட்டாயமாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். எங்கு எப்படி என்னவாக இருந்தாலும், எங்களுடைய சுய அடையாளங்களை நாங்கள் ஒருபோதும் தொலைத்துவிடக்கூடாது.

சாம் அண்ணாவுக்கும் ரஜித்தா அக்காவுக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் கோடி முத்தங்களும்.



16 views0 comments

Comments


bottom of page